ஆகஸ்ட் 2013 - கந்தன் திருவடி சரணம்

ஓம் சிவ சிவ ஓம் அவனின்றி ஓர் அணுவும் இல்லை

பங்குனி உத்திர விரதம்

AM 9:04
பங்குனி உத்திர விரதம்
மாதங்களில் கடைசி மாதமாக பங்குனி மாதம் வந்தாலும் 
அதில் பிறப்பவர்கள் முதலிடத்தை பெற்றவர்களாக விளங்குவர்
காரணம் சிவனின் மைந்தனுக்கு தேசமெங்கும் கொண்டாடும் உத்திரப் 
பெரு விழா நடைபெறும் மாதமாக இம்மாதம் விளங்குகிறது
பிறந்தவுடன் குழந்தை பாலுக்காக அழுகிறது.கொஞ்சம் வளர்ந்தவுடன் படிக்கும் நூலுக்காக அழுகிறது. படித்து முடித்துவிட்டால், வேலை வாய்ப்புக்காக ஏங்குகிறது

வேலை வாய்ப்பு கிடைத்தவுடன், நாளும் பொழுதும் கனவுலகில் சஞ்சரித்து, நல்ல வாழ்க்கைத்துணை அமைய கோவில்களை நாடிச் செல்ல வைக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கும், பிரிந்த தம்பதியர் இணையவும், பிரச்சினைக்கு மத்தியில் உழலும் குடும்பத்தில் அமைதி கிடைக்கவும் வழிகாட்டும் நாள் தான் பங்குனி உத்திர திருநாள்.. அன்று தினம் கந்தப் பெருமானை, கவலை தீர்க்கும் முருகனை, கடம்பனை, கார்த்திகேயனை, குகனை, குறிஞ்சி மலரை மணந்த வள்ளலை, வள்ளி மணாளனை, தேவசேனா துணைவனை, ஞானப்பழம் கேட்டு மயில் ஏறி உலகை வலம் வந்தவனை, மால்மருகனை, சிந்தையில் நிறுத்தி, சிவாலயம் சென்று வழிபட்டால், வந்த துயரங்கள் விலகியோடும்.வாழ்க்கைத்துணையும் சிறப்பாக வந்து சேரும்

ராமபிரான் சீதையை மணந்து கொண்டதும், மீனாட் சியம்மன் சொக்கநாதரை மணந்து கொண்டதும், ரதிக்காக மன்மதனை சிவபெருமான் எழுப்பி தந்ததும் இந்த நாளில் தான் என்று புராணங்கள் சொல்கின்றன. தெய்வ திருமணங்கள் நடைபெற்ற இந்நாளில் மனிதர்கள் விரதமிருந்து மால்மருகனை வழிபட்டால், மணமாலை சூடுகிற வாய்ப்பு கைகூடி வரும்.

ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் சிலருக்கு இருக்கலாம். ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் அது செவ்வாய் தோஷம் என்று கருதப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆணாக இருந்தால் பெண் கிடைப்பது அரிது. பெண்ணாக இருந்தால் மாப்பிள்ளை கிடைப்பது அரிது.

செவ்வாய்க்குரிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவதோடு, அதன் பாதசார அடிப்படையில் தேர்ந்தெடுத்த தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டு, முருகப்பெருமானையும் செவ்வாய்க்கிழமை தோறும் முறையாக வழிபட்டு வந்தால் முத்தான வாழ்க்கை அமையும். செவ்வாய் தோஷத்தைக் கூட சந்தோஷமாக மாற்றுகிற ஆற்றல் பங்குனி உத்திர விரதத்திற்கு உண்டு.

வாழ்க்கை வளமாக எதையேனும் நாம் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை சிவன் மீது வைத்து, மாசி மாதம் சிவராத்திரி கொண்டாடுகின்றோம். தந்தை மீது மாசி மாதத்தில் நாம் வைத்த நம்பிக்கையை தனயன் மீது பங்குனி மாதத்தில் நாம் வைக்க வேண்டும். எனவே, பங்குனி உத்திரத்தன்றுவேலை வணங்குவதே வேலைஎனக் கொள்வது நல்லது.

முழு நாளும் விரதமிருந்து, மாங்கனியை நைவேத்தியமாக வைத்து மால்மருகனை வழிபட வேண்டும். இல்லத்து பூஜை அறையில் வள்ளி தெய்வானையுடன் இணைந்த முருகன் படத்தை வைத்து, அருகில் பஞ்சமுக விளக்கேற்றி, ஐந்து வகை எண்ணெய் ஊற்றி, ஐந்து வகை புஷ்பம் வைத்து, ஐந்து வகை நைவேத்தியமும் செய்து வைத்து, கவச பாராய ணங்களைப் படிப்பது நல்லது.

குத்து விளக்கின் கீழ் இடும் கோலம், பின்னல் கோலமாக இல்லாமல், ‘நடுவீட்டுக் கோலம்என்றழைக்கப்படும் முக்கோண, அறுகோண, சதுரங்கள் அமைந்த கோலங்கள் இடவேண்டும். கோலத்தில் புள்ளி அதிகமிருந்தால் தான்புள்ளிஎனப்படும்வாரிசுபெருகும் என்பார்கள். நைவேத்தியமாக வைத்த மாங்கனியையோ, தேன் கதலி வாழைப்பழத்தையோ நாம் சாப்பிட வேண்டும்.
தள்ளாத கிழவனாய், குறவள்ளி கரம் பற்றத் தனியாக வந்த பெருமான், தனதனெனும் சந்தத்தை அருணகிரி நாதருக்கு தயங்காமல் கொடுத்த பெருமான், உங்கள் சொல்லுக்குச் செவி சாய்த்து சுகங்களையும், நலங்களையும் வாரி வழங்குவார்! உத்திரத்தைக் கொண்டாடினால் உன்னத வாழ்வமையும்!

முருகன் என்றாலே அழகன். அவன் கோவில் கொண்டுள்ள தலங்களும் அழகானவை என்று சொல்லவா வேண்டும்! அத்தகையதோர் எழில்மிக்க தலம் வயலூர். எங்கெங்கும் பசுமை தவழும் வயல்கள்இனிய சூழல்இயற்கையாகவே இறைநாட்டம் நம்மைவந்து அரவணைக்கும் உணர்வு.
வயலூர் என்றாலே நமக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நினைவுக்கு வருவார். சில நூற்றாண்டுகளுக்குமுன் வாழ்ந்த அருணகிரியாரும் மனதில் தோன்றுவார். சித்தர்கள் தேடிவந்து முக்திபெற விரும்பும் தலம் வயலூர் என்பார்கள். இங்கே ஆலயம் அமைந்த வரலாறு என்ன?
முற்காலத்தில் சோழமன்னன் ஒருவன் வேட்டையாடுவதற்காக இப்பகுதியின் வழியே சென்றான். அப்போது கரும்புத் தோட்டத்தில், ஒரே கணுவில் மூன்று கரும்புகள் விளைந்திருப்பதைக் கண்டு ஆச்சரியமுற்று அதை வெட்டியபோது, அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதிர்ச்சியடைந்த மன்னன் அங்கே நிலத்தை அகழ்ந்தபோது, உள்ளே சுயம்புமூர்த்தியாக சிவலிங்கம் இருப்பதைக் கண்டு ஆனந்த முற்றான். அவருக்கு ஆதிநாதர் என்று பெயர் சூட்டி ஆலயம் அமைத்தான். அம்பாள் விக்ரகம் சமைத்து ஆதிநாயகி என பெயர் சூட்டி பிரதிஷ்டை செய்தான்.

இவ்வாறு உருவான இத்தலத்தில் விநாயகர், முருகர் உள்ளிட்ட தெய்வ சந்நிதிகளும் அமைக்கப்பட்டன. தந்தைக்கு பாடம் சொன்ன சுவாமிநாதனான முருகன், இத்தலத்தில் தந்தையையும் மிஞ்சிய புகழுடன் சுப்பிரமணியனாக- முத்துக்குமாரசுவாமியாகத் திகழ்கிறான்.

சிற்றின்பத்தையே பேரின்பமாகக் கருதி திளைத்துக் கிடந்த அருணகிரிநாதர் இறுதியில் திருவண்ணாமலையில் முருகன் அருள்பெற்றார். முருகன் அடியெடுத்துக் கொடுக்கமுத்தைத் தரு பத்தித் திருநகைஎனத் தொடங்கும் திருப்புகழ் பாடலைப் பாடினார். அதன்பின் அவர் பாடல் எதுவும் பாடாமலிருந்த நிலையில், வயலூர் முருகன் அசரீரி வாக்கால் தன் எல்லைக்கு அழைத்தார்.

அதைக் கேட்ட அருணகிரியார் மிகுந்த ஆவலுடன் வயலூர் வந்தார். ஆனால் அவருக்கு முருகனின் திருக்காட்சி கிடைக்கவில்லை. ஏமாற்றமடைந்த அருணகிரி, “”அசரீரி வாக்கு பொய்யா?” என உரக்க கத்தினார். அப்போது அங்கு தோன்றிய விநாயகர், “”அசரீரி வாக்கு உண்மையேஎன்று கூறி முருகப் பெருமானைக் காட்டியருளினார்.

அப்போது முருகன் அருணகிரியாரின் நாவில் தன் வேலால்ஓம்என்ற பிரணவ மந்திரத்தை எழுதினார். அதன் பின்னர் அங்கு 18 பாடல்களைப் பாடிய அருணகிரியார், மேலும் பல தலங்களுக்குச் சென்று பாடினார். இவ்வாறுதிருப்புகழ்என்னும் ஒப்பற்ற நூல் கிடைக்கக் காரணமானவர் இந்த முருகப் பெருமானே. அதனால்தான் கல்வி, கலைகளில் தேர்ச்சிபெற விரும்புவோர் வயலூர் முருகனை வழிபட்டுச் செல்கிறார்கள்.

வாரியார் சுவாமிகள் வயலூர் முருகனின் அருள்பெற்றவர். அவர் சொற்பொழிவாற்றத் தொடங்கும் முன், “எல்லாம் வல்ல எம்பெருமான் வயலூர் முருகப் பெருமான் திருவடிகளை வணங்கி’… என்று சொல்லித் தொடங்கும் வழக்கம் கொண்டவர். அவர் 1934-ல் இந்தக் கோவிலுக்கு வருகைபுரிந்து முருகப் பெருமானை தரிசித்தார்.

அப்போது முருகனுக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது. அருகேவெள்ளிக்கவசம் அணிவிக்க 50 காசுகள் கட்டணம்என்ற அறிவிப்புப் பலகையைக் கண்டார். உடனே அர்ச்சகரின் தட்டில் 50 காசுகளைப் போட்டுவிட்டுத் திரும்பினார்.
அன்றிரவு அர்ச்சகரின் கனவில் தோன்றிய முருகன், “”என் பக்தனிடம் 50 காசு வாங்கினாயேஅதைக் கொண்டு எனக்கு கோபுரம் கட்ட முடியுமா?” என்று கேட்டுவிட்டு மறைந்தார். திடுக்கிட்டுக் கண்விழித்தார்
அர்ச்சகர். விடிந்ததும் முதல் நாள் வந்திருந்தவர் வாரியார் என்பதை அறிந்து, அந்த 50 காசை வாரியாருக்கு மணியார்டர்மூலம் அனுப்பிவைத்தார். விவரமறிந்த வாரியார் வியப்படைந்து, ராஜகோபுரம் கட்டவேண்டுமென்பது முருகனின் ஆணையெனக் கொண்டு, பலரிடமும் உதவிபெற்று வயலூர் ஆலயத்தில் கோபுரம் கட்டி குடமுழுக்கிற்கும் ஏற்பாடு செய்தார். சுமார் நாற்பது ஆண்டுகள் இவ்வாலயத் திருப்பணிக்காக பாடுபட்டவர் வாரியார் சுவாமிகள். இவ்வாலயப் பெருமையை அகிலமெங்கும் பரப்பியதில் வாரியாரின் பங்கு மிகப்பெரியது.
இங்கு எழுந்தருளியிருக்கும் விநாயகர் பொய்யா கணபதி எனப்படுகிறார். மாயையான வாழ்வை உண்மையென்று நம்பி வாழ்பவர்களை மெய்ஞ்ஞான வழிக்குத் திருப்பி அருள்புரிவார் இந்த பொய்யா கணபதி.
அருணகிரியார் தனது திருப்புகழ் காப்புச் செய்யுளில் பாடியுள்ள கணபதி இவரே. இவர் சந்நிதியின் அருகே அருணகிரியாருக்கு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. எதிரே கல்லால மரத்தின்கீழ் வீற்றிருந்து அருள்கிறார் தட்சிணாமூர்த்தி.
இந்த கணபதி சந்நிதிக்கு அருகில்தான் வயலூரில் வரம்கொடுத்தருளும் முருகன் முத்துக்குமார சுவாமியாக எழுந்தருளியுள்ளார். “வயலூர் முருகன் இருக்க அயலூர் எதற்கு?’ என்று பக்தர்கள் சொல்லும் அளவுக்கு எண்ணிலாத ஏற்றத்தைத் தருபவர் இந்த முருகன். மயில் வாகனம், கடம்பமலர்மாலை, வடிவேல், சேவற்கொடி ஆகியவற்றுடன் காட்சிதரும் முருகப் பெருமானை நாளெல்லாம் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
இந்த சுப்பிரமணியர் மணக்கோலத்தில் குமரனாக உள்ளதால், செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை அடைந்தவர்கள் இவரை வந்து வழிபட்டுச் சென்று நலம்பெறுகின்றனர்.
கந்த சஷ்டியின்போது முருகன்- தெய்வானை திருமண வைபவமும்; பங்குனி உத்திரத்தன்று முருகன்- வள்ளி திருக்கல்யாணமும் விமரிசையாக நடைபெறும்.
மகா சிவராத்திரியன்று ஈசன் ஆதிநாதருக்கு சிறப்பாக பூஜைகள் நடக்கும்.

இவ்வாலயத்தில் காலைத் தூக்கியாடாத நடராஜரை தரிசிக்கலாம். இது தாண்டவத்துக்கு முந்தைய நிலையாகும். எனவே இவரது ஜடாமுடி முடியப்பட்ட நிலையிலேயே இருக்கும். காலுக்குக் கீழே முயலகனும் இல்லை. இவர் சதுரதாண்டவ நடராஜர் எனப்படுகிறார்.
குறைவற்ற பூஜைகளை ஏற்றுக் கொள்ளும் வயலூர் முருகன், பக்தர்களுக்கு நிறைவான வாழ்வைத் தருகிறார் என்பது சத்தியமான உண்மை. வயலூர் ஆறுமுகனை வணங்குவோர்க்கு என்றும் ஏறுமுகம்தான்!
திருச்சியிலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது வயலூர் தலம். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லலாம். காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரையிலும்; மாலை 3.30 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கு பவன் முருகப் பெருமான். இப்பெருமான் சிறப்பு டன் கோவில் கொண்டருளும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர் சோலை, திருத்தணி ஆகிய தலங்கள் அறுபடை வீடுகள் என்ற சிறப்பினைப் பெற்று பக்தர்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டுத் தலங்களாகத் திகழ்கின்றன.
தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அறுபடை வீடுகளை தஞ்சை நகரிலேயே தரிசிக்க முடியும்.
தஞ்சை நகரில் அமைந்துள்ள மேலவீதி முருகன் கோவில்- திருப்பரங்குன்றம்; பூக்காரத் தெரு முருகன் கோவில்- திருச்செந்தூர்; சின்ன அரிசிக்காரத் தெரு முருகன் கோவில்- பழனி; ஆட்டுமந்தைத் தெரு முருகன் கோவில்- சுவாமிமலை; குறிச்சித் தெரு முருகன் கோவில்- திருத்தணி; வடக்கலங்கம் முருகன் கோவில்- பழமுதிர்சோலை. இந்த ஆறு கோவில்களிலும் அறுபடை வீடுகளில் உள்ளதுபோலவே முருகப் பெருமானின் திருமேனிகள் அமைந்து, முறைப் படி சிறப்பான வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன.

திருச்செந்தூரிலிருந்து தஞ்சைக்கு எழுந்தருள மனம்கொண்ட முருகப் பெருமான், அதற்கென நிகழ்த்திய வரலாறு வியக்க வைப்பது.
திருச்செந்தூரில் வாழ்ந்த ஞானி ஒருவர், தான் வழிபடும் முருகக் கடவுளின் செப்புத் திருமேனி யைத் தன் சொத்தாகவும் உறவாகவும் கொண்டு வாழ்ந்து வந்தார். அவர் அந்த முருகன் சிலையை வேட்டியில் மூட்டையாகக் கட்டி தான் செல்லுமிடங்களுக்கெல்லாம் எடுத்துச் செல்வார். தினமும் அவர் நீராடிய பின் முருகன் சிலையையும் நீராட்டி முறைப்படி வழிபாடு செய்வார்.
முதுமை அடைந்த நிலையில் தனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்த ஞானி, தன்னுடைய முருகன் நித்திய வழிபாட்டிற்குரிய வராகத் திகழவேண்டும் என்று விரும்பி, அதற்கு அருள்புரியுமாறு முருகனிடம் பிரார்த்தித்தார்.

ஒருநாள் ஞானியின் கனவில் முருகப் பெருமான் முதியவர் வடிவில் தோன்றி, தன்னோடு வருமாறு அவரை அழைத்துச் சென்றார். இருப்புப் பாதையை ஒட்டிய வழியில் சென்று, ரயில்வே கேட்டில் பணிபுரியும் ஒருவரைக் காட்டி, அந்த முருகன் சிலையை அவரிடம் கொடுக்கும்படி கூறிவிட்டு மறைந்தார். விழித்தெழுந்த ஞானி, முருகன் தன் குழப்பத்திற்குத் தீர்வு காட்டிவிட்ட தற்காக மகிழ்ச்சி அடைந்தார்.

விடிந்ததும் தன் கடமைகளை முடித்தபின் அவர் முருகன் சிலையை  எடுத்துக்கொண்டு, கனவில் முருகன் காட்டிய பாதையில் சென்றார். குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பணியாளரைக் கண்ட ஞானி, அவர் எதிரில் போய் நின்றார். பணியாளருக்கு ஆச்சரியம்.
முதல் நாள் இரவுதான் சாமியார் ஒருவர் அழகிய முருகன் சிலையை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு மறைவதுபோல் கனவு கண்டிருந்தார். அதே சாமியார் சிலையுடன் எதிரில் நிற்பதைக் கண்டதும் முருகனின் திருவிளையாடலைக் கண்டு வியப்படைந்தார். பிறகு அவரிடமிருந்து பயபக்தியுடன் சிலை யைப் பெற்றுக்கொண்டார்.

ரயில்வே பணியாளரின் சொந்த ஊர் தஞ்சாவூர். எனவே முருகன் சிலையுடன் தஞ்சை வந்து சேர்ந்தார். உற்றார்- உறவினர், சுற்றுப்புறத் தில் வசிப்பவர்கள் அனைவரிடம் தான் கனவில் கண்ட காட்சி நனவில் நடந்தேறிய அற்புதத் தைக் கூறி மகிழ்ந்தார். அவர் வசித்து வந்த பூங் கொல்லைகள் நிறைந்த பூக்காரத் தெருவில் ஓர் ஓலைக்குடிசை அமைத்து, முருகனை அங்கு அமர்த்தி அனைவரும் வழிபட்டு வந்தனர்.
1904-ல் ஓலைக்குடிசையில் அமர்த்தப்பட்ட முருகன், பக்தர்களின் பெருமுயற்சியால் பூக்காரத் தெருவிலேயே நிர்மாணிக்கப்பட்ட கற்கோவிலில் எழுந்தருளினார்.
1911-ஆம் ஆண்டு திருக்குட முழுக்கு செய்விக் கப்பட்டது. அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமண்யக் கடவுளின் திருமேனியும், பக்கத்தில் திருச்செந்தூரிலிருந்து கொண்டு வரப்பட்ட முருகன் சிலையும் ஸ்தாபிக்கப் பட்டன.

பலிபீடம், கொடிக்கம்பம், மயில் மண்டபம் ஆகியவற்றைக் கடந்து சென்றதும் தென்புறத் தில் விநாயகரையும், வடபுறத்தில் இடும்பனையும் தரிசித்த பின்னரே சுப்ரமணியக் கடவுளை வழிபடுகிறோம்.

தூரத்தில் நின்று வணங்கினாலும், நமக்கு முன்னே உயரமானவர்கள் நின்றாலும் மறைக் காத உயரத்தில் மூலவர் அமைக்கப்பட்டுள் ளது இக்கோவிலின் சிறப்பு. சிவாலயங்களில் வழிபாட்டின்போது தேவாரம் பாடப்படுவது போல் இவ்வாலயத்திலும் தேவாரம் பாடும் வழக்கம் உள்ளது.
இக்கோவிலின் தலவிருட்சம் வன்னி மரம் மேற்குப் பிராகாரத்தில் உள்ளது. இறைத் திருமேனியின் திருமுழுக்காட்டிற்கு வடக்குப் பிராகாரத்தில் உள்ள கிணற்று நீர் பயன்படுத்தப் படுகிறதுசந்நிதியின் நேரெதிரே கல்லணைக் கால்வாய் தீர்த்தவாரியாக அமைந்துள்ளது. ஆடிப்பெருக்கு, கந்தசஷ்டிப் பெருவிழாவின் 10-ஆம் நாள் விழா ஆகிய நாட்களில் முருகப் பெருமான் இவ்வாற்றிற்கு எழுந்தருளி தீர்த்த வாரி காண்பார்.

இரண்டு பிராகாரங்களைக் கொண்ட இத்திருக்கோவிலுக்குத் திருவீதிகளாக- கிழக்கில் பூக்கார விளார்சாலை, தெற்கில் வீர வாண்டையார் தெரு, மேற்கில் கல்லுக்குளம் சாலை, வடக்கில் திருச்சி சாலை என நான்கு புறமும் சாலைகள் அழகு சேர்க்கின்றன.
ஆண்டு முழுவதும் முருகனின் நட்சத்திரங் கள் இணைந்த நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறப்பான வழிபாடுகள் நடை பெறுகின்றன. பக்தர்கள், குறிப்பாகத் தஞ்சாவூர் வாசிகள் பூக்காரத் தெரு அருள்மிகு சுப்பிர மணிய சுவாமியை திருச்செந்தூர் முருகனா கவே பாவித்து வணங்கி இன்புறுகிறார்கள்